இந்தியருக்கு சமூக ஊடகத்தில் கிடைத்த பிரித்தானிய தோழி... இறந்துவிட்டதாக கிடைத்த தகவல்: ஒரு எச்சரிக்கை செய்தி
சமூக ஊடகத்தில் இந்தியர் ஒருவருக்கு ஒரு பிரித்தானிய பெண்ணின் நட்பு கிடைத்தது.
புவனேஷ்வர் என்ற இடத்தைச் சேர்ந்த அந்த 65 வயது நபரும், தன்னை லண்டனைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட சூசன் மார்கன் என்ற அந்த பெண்ணும் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்வதுண்டு.
தன்னை ஒரு செல்வந்தராக காட்டிக்கொண்ட சூசன், ஒரு கட்டத்தில் அந்த இந்தியரை தனது ஹெச் எஸ் பி சி வங்கிக் கணக்கில் நாமினியாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சமூக ஊடக நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருந்த நிலையில், ஒரு நாள் இந்த இந்தியருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தான் ஹெச் எஸ் பி சி வங்கியிலிருந்து அழைப்பதாக தெரிவித்த மைக்கேல் லாரண்ட் ஜெஃபர்சன் என்ற நபர், சூசன் இறந்துபோனதாகவும், அவரது நாமினியாக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், சூசனின் வங்கிக்கணக்கில் இருக்கும் சுமார் 2 கோடி ரூபாய் பணம் உங்களுக்குத்தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
பின்னர் ஜான் ஃப்லிண்ட் என்னும் மற்றொருவர் இந்த இந்தியரைத் தொடர்புகொண்டுள்ளார். தன்னை ஹெச் எஸ் பி சி வங்கியின் அதிகாரி என்று கூறிக்கொண்டு, சூசனின் பணத்தை பெற வேண்டுமானால் ப்ராசசிங் கட்டணமாக 50 லட்ச ரூபாய் செலுத்தவேண்டும் என்றும், அடையாள அட்டை முதலானவற்றை அனுப்புமாறும் கூற, இந்த இந்தியரும் தன்னைக்குறித்த விவரங்களுடன், 40.51 லட்ச ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார்.
அவ்வளவுதான், அப்புறம் சூசனையும் காணவில்லை, ஹெச் எஸ் பி சி வங்கி அதிகாரிகளையும் காணவில்லை. தான் வசமாக ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்துகொண்ட அந்த இந்தியர், பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
பிரித்தானிய சிம் கார்டுகளை பயன்படுத்தி பேசிய அந்த மோசடியாளர்களை ட்ரேஸ் செய்யும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.
பணி ஓய்வு பெற்றபோது தனக்குக் கிடைத்த பணத்தை சமூக ஊடக நட்பால் இழந்துவிட்டு, என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருக்கிறார் அந்த இந்தியர்!
இதேபோல், கடந்த மாதம் மற்றொரு இந்தியருக்கு பெர்லினில் வாழும் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்க, அவர் அவர் 57.4 லட்ச ரூபாயை பறிகொடுத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் இதுபோல் மோசடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பண ஆசையாலும், சபலத்தாலும் பலர் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்துவரும் நிலையில், இந்த செய்திகளை மற்றவர்கள் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பலாம்.