புகலிடக்கோரிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய உள்துறை அலுவலகம்
தங்கள் தவறால் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அலுவலகத்தில் குளறுபடிகள்
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு உள்துறை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், உங்கள் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்களுக்கு அகதி நிலையும், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, ஒரு ஈரானிய தம்பதிக்கு புலம்பெயர்தல் அமைப்பு ஒன்றிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அழைத்தவர், பிரித்தானியாவில் வாழ உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணுக்கு, உள்துறை அலுவலகத்திலிருந்து, அவருக்கு பிரித்தானியாவில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறவே, அவர் தங்கவைக்கப்பட்டிருந்த ஹொட்டலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவருமே, பிரித்தானியாவில் வாழ தங்களுக்கு அனுமதி கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் இரண்டாவது தகவல் வந்துள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இரண்டாவது செய்தி
பிரித்தானியாவில் வாழ தங்களுக்கு அனுமதி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்திருந்த அந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உள்துறை அலுவலகத்திடமிருந்து இரண்டாவதாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, எங்கள் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரித்தானியாவில் வாழ உங்களுக்கு தவறுதலாக அனுமதியளிக்கப்பட்டுவிட்டது என அந்த செய்தி கூறவே, மகிழ்ச்சியில் இருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய உள்துறை அலுவலகம்
இந்நிலையில், இப்படி தொடர்ந்து குளறுபடிகளை ஏற்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை மன அழுத்தத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கிய பிரித்தானிய உள்துறை அலுவலகம், தங்களால் ஏற்பட்ட சிரமத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |