பிரித்தானிய பெண்ணின் விசாவை ரத்து செய்த இலங்கை! நாட்டைவிட்டு வெளியேற கெடு...
- இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பிரித்தானிய பெண் ஒருவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்த பிரித்தானியப் பெண் இன்ஸ்டாகிராமரை, ஆகஸ்ட் 15-ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது நடவடிக்கைகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் விசா நிபந்தனைகளை மீறினாரா என்பதை சரிபார்க்க, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகஸ்ட் 2-ஆம் திகதி நெய்த்தானிய பெண்ணான கெய்லி ஃப்ரேசரின் (Kayleigh Fraser) கடவுச்சீட்டை பரிசோதனைக்காக கைப்பற்றினர்.
தொடர்புடைய முந்தைய செய்தி: இலங்கையில் பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல்!
அவர் இலங்கையில் மருத்துவ காரணங்களுக்காக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணைக்காக ஏழு நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்திற்குச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஃப்ரேசர், சமீபத்தில் "Galle face" இல் நடைபெற்ற 'GotaGoHome' வெகுஜன எதிர்ப்புப் பிரச்சாரத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டிருந்தார்.
விசாரணைக்குப் பிறகு, திணைக்களம் அவரது விசாவை ரத்து செய்தது மற்றும் ஆகஸ்ட் 15-ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியது.
இலங்கை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வரலாறு காணாத பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளது.
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தவறாகக் கையாண்டதற்காக அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது இளைய சகோதரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை நாடு கண்டுள்ளது.