ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் உயிரிழந்த பிரித்தானியர்... ஆனாலும் தடுப்பூசியை விடவேண்டாம் என்று கூறும் அவரது சகோதரி
பிரித்தானியாவில் சட்டத்தரணியாக பணியாற்றிய ஒருவர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டபின் உயிரிழந்த நிலையிலும், மக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவரது சகோதரி.
Merseyside என்ற இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த சட்டத்தரணியான Neil Astles (59), ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து 10 நாட்கள் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார்.
அவரது கண்பார்வையும் குறிந்துகொண்டே வந்த நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட Astles, 15 நாட்களுக்குப் பின் உயிரிழந்தார்.
தன் சகோதரருக்கு இதுவரை எந்த உடல் நலக்குறைவும் கிடையாது, இரத்தக்கட்டிகள் எல்லாம் அவருக்கு ஏற்பட்டதேயில்லை என்று கூறும் Astlesஇன் சகோதரியான Dr Alison Astles, மருந்தாளுநராக பணியாற்றிவருகிறார்.
தன் சகோதரர் உயிரிழந்த நிலையிலும், எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றுதான் என்றாலும், மக்கள் கட்டாயம் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் Dr Alison Astles.
ஏதோ என் சகோதரன் அதிகப்படியாக துரதிர்ஷ்டசாலியாக இருந்துவிட்டார், அவ்வளவுதான் என்று கூறும் Dr Alison Astles, நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால், நம்மில் சிலருக்கு இரத்தக்கட்டிகள் உருவாகலாம், ஆனாலும் சிலர்தான் உயிரிழக்கப்போகிறார்கள் என்பதற்கு இது ஆதாரம் என்கிறார்.
ஆகவே, தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது நம் அனைவருக்கும் நல்லதே என்கிறார் Dr Alison Astles.
Astles, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் உயிரிழந்தவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

