பச்சிளம் குழந்தைக்கு பிரித்தானிய மருத்துவ ஊழியரின் கொடுஞ்செயல்: வாழ்நாள் முழுவதும் பாதிப்பு
பிரித்தானிய மருத்துவ பெண் ஊழியர் ஒருவர், தன் மீது கவனத்தை திசை திருப்பும் பொருட்டு நோயாளியான பச்சிளம் குழந்தைக்கு விஷம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள பாசிங்ஸ்டோக் மருத்துவமனையிலேயே 4 மாத பச்சிளம் குழந்தைக்கு 35 வயதான அந்த பெண் மருத்துவ ஊழியர் விஷம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு துவக்கத்தில் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் அந்த நான்கு மாத குழந்தை பாசிங்ஸ்டோக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
பின்னர் திடீரென்று அதன் உடல் எடை குறைந்து வருவதாக கூறி மோசமான அறிகுறிகளுடன் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், குழந்தையின் ரத்தத்தில் அதிக அளவு அமிலம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, குழந்தையின் உடம்பில் காணப்படும் அமிலம் தொடர்பில் விரிவான பரிசோதனைக்காக சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்பட்டது.
அதில் குழந்தையின் உடம்பில் கலந்திருப்பது மலச்சிக்கலுக்கான சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Lactulose என்ற சக்திவாய்ந்த மலமிளக்கியின் அம்சம் என்பது கண்டறியப்பட்டது.
இது குழந்தையின் மலத்தில் இருந்தே மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மட்டுமின்றி, அது 100 மடங்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண் ஊழியர் சிக்கியதுடன், அவர் இது தொடர்பில் இணையத்தில் தகவல் சேகரித்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், முதலில் மறுப்பு தெரிவித்து வந்தவர் பின்னர் கடிதம் ஒன்றில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
குழந்தையின் உடமில் கலந்திருக்கும் அந்த அமிலத்தின் தாக்கம் அதற்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், உடம்பில் அந்த அமிலத்தின் தன்மை குறையாது என்றே மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த பெண் ஊழியர் தன்மீது கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற ஆபத்தான செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், திட்டமிட்டே சுமார் மூன்று மாத காலமாக குறித்த குழந்தைக்கு Lactulose என்ற சக்திவாய்ந்த மலமிளக்கியை அளித்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் இரண்டு ஆண்டு காலம் மருத்துவமனை பணியில் இருந்து இடைநீக்கமும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 150 மணி நேரம் ஊதியமற்ற பணியில் ஈடுபடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.