எக்கச்சக்கமான போதைப்பொருளுடன் சிக்கிய படகுடன் பிரித்தானியர்களுக்கு தொடர்பு: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஒரு டன் எடையுள்ள போதைப்பொருள் சிக்கியுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய மூன்று பிரித்தானியர்களும் சிக்கியுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியனிலிருந்து ஐரோப்பா நோக்கி வந்துகொண்டிருந்த ஒரு படகை சுற்றி வளைத்த ஸ்பெயின் பொலிசாரும் சுங்க அதிகாரிகளும், அந்த படகை சோதனையிட்டனர். அப்போது, அதில் ஒரு டன் எடையுள்ள கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் 80 மில்லியன் பவுண்டுகளாகும்.
கடந்த மாதம் ஸ்பெயினில் நடந்த ஒரு ரெய்டின்போது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 10 பேர் சிக்கினார்கள். அவர்களில் ஒருவர், பிரித்தானிய குடிமகனான Robert Mark Benson (64).
அவர் ஒரு முன்னாள் பிரித்தானிய கடற்படை வீரர் ஆவார். அவர் தலைமையிலான போதைப்பொருள் கும்பல்தான் தற்போது சிக்கியுள்ளதாக கருதப்படுகிறது. அவரது கைதைத் தொடர்ந்தே, தற்போது இந்த படகும் மடக்கப்பட்டுள்ளது.
இந்த படகில் இருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரும் பிரித்தானியர்கள் என நம்பப்படுகிறது. மிக பிரமாண்டமான போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ஒன்றில், மூன்று பிரித்தானியர்கள் சிக்கியுள்ள சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.