பிரித்தானியர்கள் ராணுவ நடவடிக்கை மூலம் மீட்கப்படமாட்டார்கள்: பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்ட பிறகு, ராணுவ மீட்பு நடவடிக்கை மூலம் நாம் மீட்கப்படுவோம் என பிரித்தானியர்கள் யாரும் நம்பி உக்ரைனில் இருக்க வேண்டாம் என துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெம்ஸ் ஹெஅப்பேய் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் மேற்கு நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனை விட்டு வெளியேற உத்தரவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறும், வணிக தொடர்பு போன்ற காரணங்களுக்காக மேலும் அந்த நாட்டிற்கு பயணம் செய்யவேண்டாம் எனவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ராணுவ நடவடிக்கைகள் மூலமாக ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானியர்கள் மீட்கப்பட்டது போல் இந்த மோதலிலும் மீட்கப்படுவோம் என்று நம்பி இருக்கவேண்டாம் என பிரித்தானியாவின் துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெம்ஸ் ஹெஅப்பேய் எச்சரித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் பிரித்தானிய ராணுவத்தை நீடிப்பது தொடர்பாக இதுவரை எந்த ஒரு ராஜதந்திர முடிவுகளும் எடுக்கவில்லை எனவும், போர் பயிற்சிகள் நிறைவடைந்ததும் பிரித்தானிய ராணுவம் உக்ரைனை விட்டு விரைவில் வெளியேறும் எனவும் ஜெம்ஸ் ஹெஅப்பேய் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மோதல் ஏற்பட்டால் அங்கு பிரித்தானிய ராணுவம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.