உடனே வெளியேறிவிடுங்கள்... ஆசிய நாட்டில் பிரித்தானியர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் வன்முறைக்கு மத்தியில் பிரித்தானிய அரசு தனது நாட்டு மக்கள் அனைவரையும் உடனே வெளியேறுமாறு கூறியுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு பயணங்களை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, தலிபான்கள் அச்சுறுத்தல் நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தான அறிகுறி எனவும் ஐக்கிய நாடுகள் மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பிரித்தானிய குடிமக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் முன்வைத்துள்ளது.
தொழில் ரீதியான எந்த நடவடிக்கையும் தற்போதைய சூழலில் உகந்தது அல்ல எனவும், பிரித்தானிய மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், பிரித்தானிய தூதரகத்தால் எதிர்பார்க்கும் அளவுக்கு உதவ முடியாது எனவும் அதில் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்கள் உரிய ஆவணங்களை உடனடியாக தயார் நிலையில் வைத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் வெளிநாட்டவர்கள் மீது கடத்தல் அச்சுறுத்தல் உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தான் ஏற்கனவே பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடாகும்.
தற்போது தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலும் இணைந்துள்ளதால், பிரித்தானிய மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெளிவிவகார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.