பிரதமராகும் ரிஷி சுனக்: பிரித்தானிய மக்கள் ஏமாற்றம், கட்சி உறுப்பினர்கள் கோபம்...
ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.
ஆனால், அவரது கட்சிக்குள்ளேயோ பலருக்கு அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை.
ரிஷி சுனக் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட விடயம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா முதல், இந்தியா வரையிலான நாடுகளின் தலைவர்கள் ரிஷிக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், பிரித்தானிய மக்களின் மன நிலை என்ன?
கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததால்தான் ரிஷி கட்சித் தலைவராகியிருக்கிறார். ஆனால், கட்சியின் மற்ற உறுப்பினர்களின் கருத்து என்ன?
சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், ரிஷி அடுத்த பிரதமராவது உங்களுக்கு மகிழ்ச்சியா ஏமாற்றமா என்ற கேள்வி பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.
Credit: PA
மகிழ்ச்சி என 38 சதவிகிதத்தினர் பதிலளித்திருக்கும் அதே நேரத்தில், அதிர்ச்சியளிக்கும் வகையில், ஏமாற்றமளிக்கிறது என 41 சதவிகிதம் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.
ரிஷி கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் சிலர் தாங்கள் கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையையே ரத்து செய்திருக்கிறார்கள்.
அதற்கு முக்கியக் காரணம், இதற்கு முந்தைய முறை நடந்ததைப் போல, பிரதமரைத் தேர்வு செய்ய தங்களை வாக்களிக்க விடவில்லை என்ற கோபம்தான்.(அப்படியானால், கன்சர்வேட்டிவ் கட்சியினரை வாக்களிக்க அனுமதித்திருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது).
கட்சியை உள்ளிருந்தே நாசமாக்கிவிட்டார்கள் என குமுறுகிறார் கட்சி உறுப்பினர் ஒருவர். தனது 18 வயது முதல் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்து வந்த Lyn Bond (60) என்னும் செவிலியர், ரிஷி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் தனது கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையையே ரத்து செய்துவிட்டார். இனி கன்சர்வேட்டிவ் கட்சியினரை தான் நம்பப்போவதில்லை என்கிறார் அவர்.
முந்தைய தேர்தலில் போரிஸ் ஜான்சனுக்கு வாக்களித்த Samuel Jukes (33) என்பவர், தான் கோபத்தில் குமுறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். நாங்கள் ரிஷிக்கு வாக்களிக்கவில்லை, உடனடியாக பொதுத்தேர்தலை அறிவிக்கவேண்டும் என்கிறார் அவர்.
Image - twitter
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் பலர் தங்கள் கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையையே ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கும் Samuel, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினராக இருப்பதற்கு இப்போது நான் வெட்கப்படுகிறேன் என்கிறார்.
உடனடியாக ரிஷி ஏதாவது செய்து பிரித்தானிய பொருளாதாரத்தை நிலைப்படுத்தி தன்னை நிரூபித்தால் மட்டுமே, அவரது கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் அவரால் நல்ல பெயர் எடுக்க முடியும் என்றே தோன்றுகிறது.