புலம்பெயர்தலுக்கெதிராக வரிந்து கட்டும் அரசியல்வாதிகள்: ஆனால், பிரித்தானிய மக்கள் கருத்து என்ன?
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் என வரிசையாக பிரித்தானிய அரசியல்வாதிகள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தப்போவதாக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
ஆனால், புலம்பெயர்தல் குறித்து பிரித்தானிய பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களும் பிரித்தானிய அரசியல்வாதிகளைப்போல, குறிப்பாக, கன்சர்வேட்டிவ் கட்சியினரைப்போல புலம்பெயர்தலை எதிர்க்கிறார்களா?
இந்தக் கேள்விகளுக்கு சமீபத்திய ஆய்வு ஒன்று பதிலளித்துள்ளது.
புலம்பெயர்தலுக்கெதிராக வரிந்து கட்டும் அரசியல்வாதிகள்
புலம்பெயர்தல் பிரச்சினை இன்னும் கொஞ்ச காலத்துக்கு பிரித்தானியாவில் முக்கிய பேசுபொருளாக அமையப்போகிறது போல் தோன்றுகிறது என்று கூறும் the National Centre for Social Research என்னும் தொண்டு நிறுவனம் மற்றும் ஆய்வமைப்பைச் சேர்ந்த Alun Humphrey, அடுத்த பொதுத்தேர்தலில் அதுவே முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்படலாம் என்கிறார்.
அதேநேரத்தில், பிரித்தானிய பொதுமக்களைப் பொருத்தவரை, பெரும்பாலான மக்களிடையே, புலம்பெயர்தலைக் குறித்து நேர்மறையான கருத்துக்கள் மேலும் அதிகரித்துள்ளன என்கிறார் அவர்.
சமீபத்திய ஆய்வு முடிவுகள்
2001 ஆம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் கருத்துக்களை ஆய்வு செய்து வரும் The European Social Survey என்னும் ஆய்வமைப்பு, புலம்பெயர்தல், அதன் பொருளாதார மற்றும் கலாச்சார தாக்கம் குறித்த பிரித்தானிய மக்களின் கருத்துக்கள் கடந்த இருபது ஆண்டுகளில் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளன, குறிப்பாக, 2016 க்குப் பிறகு மக்களுடைய எண்ணங்கள் பெருமளவில் புலம்பெயர்தலுக்கு சாதகமானதாக மாறியுள்ளன என்கிறது.
புலம்பெயர்தல், பிரித்தானிய பொருளாதாரத்திற்கு மோசமானதா அல்லது நல்லதா, கலாச்சார வாழ்க்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதா அல்லது வளப்படுத்தப்பட்டுள்ளதா, மேலும் புலம்பெயர்தல், வாழ்வதற்கு சிறந்ததாக நாட்டை மாற்றியுள்ளதா அல்லது மோசமானதாக மாற்றியுள்ளதா என்னும் கேள்விகள் ஆய்வொன்றில் பிரித்தானிய மக்களிடம் கேட்கப்பட்டன.
பிரித்தானிய மக்கள் கருத்து
ஆய்வின் முடிவுகள், முதன்முறையாக, பெரும்பான்மை பிரித்தானிய மக்கள், அதாவது, 59 சதவிகிதத்தினர், புலம்பெயர்தல் பிரித்தானிய பொருளாதாரத்துக்கு நல்லதே என கருதுகிறார்கள் என்பதைக் காட்டியுள்ளன.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிரித்தானியர்களில் 58 சதவிகிதம்பேர், புலம்பெயர்தலால் நாட்டின் கலாச்சார வாழ்வு வளம்பெற்றுள்ளது என்றும், 56 சதவிகிதம்பேர், புலம்பெயர்தல், நாட்டை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றியுள்ளது என்றும் கருதுகிறார்கள்.
2002இல், வெறும் 17 சதவிகிதம் பிரித்தானியர்கள் மட்டுமே புலம்பெயர்தல் பிரித்தானிய பொருளாதாரத்துக்கு நல்லது என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.
Photograph: Susannah Ireland/AFP/Getty Images
அத்துடன், 33 சதவிகிதம்பேர் மட்டுமே, புலம்பெயர்தலால் நாட்டின் கலாச்சார வாழ்வு வளம்பெற்றுள்ளது என்றும், 20 சதவிகிதம்பேர் மட்டுமே, புலம்பெயர்தல், நாட்டை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றியுள்ளது என்றும் கருதுவதாக தெரிவித்திருந்தார்கள்.
எனவே, அரசியல்வாதிகளின் எண்ணங்கள் புலம்பெயர்தலுக்கு எதிராக மாறிக்கொண்டேவரும் நிலையில், பிரித்தானிய பொதுமக்களின் கருத்துக்களோ, புலம்பெயர்தலுக்கு ஆதரவாகவே மாறியுள்ளதை இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது.
ஆக, பிரித்தானிய அரசியல்வாதிகள்தான் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலம்பெயர்தல் குறித்த பெரும்பான்மை பிரித்தானிய மக்களின் கருத்துக்கள் நேர்மறையாகவே உள்ளன என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது என்பது, புலம்பெயர்வோருக்கு ஆறுதலையளிக்கும் விடயம்தானே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |