பிரித்தானிய தொலைபேசி ஹேக் விவகாரம்: சம்பந்தப்பட்டவர் மகாராணியாரின் நண்பர் என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி
பிரித்தானிய ராஜ குடும்பத்தின் முன்னாள் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Fiona Shackleton, ராஜ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் சார்பில் ஆஜராகும் ஒரு சட்டத்தரணி. அத்துடன், அவர் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை ஹேக் செய்தவர் மகாராணியாரின் நண்பரும், துபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமருமான ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூம் என தெரியவந்துள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஷேக் மொஹ்மத், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Fionaவின் நாடாளுமன்றம் தொடர்பிலான மின்னஞ்சல்களையும் வேவு பார்த்திருப்பது நாடாளுமன்றத்தையே அதிரவைத்துள்ளது.
அத்துடன், அவர் Fionaவின் கட்சிக்காரரும், மொஹ்மதுக்கு பயந்து தன் பிள்ளைகளுடன் பிரித்தானியாவுக்கு தப்பியோடியவருமான தனது மனைவியான இளவரசி ஹயாவின் ஐபோனையும் ஹேக் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து நேற்றிரவு பேசிய லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Chris Bryant, இனியாவது பிரித்தானியா விழித்துக்கொள்ளவேண்டும், வெளியுறவு அலுவலகம் துபாயுடனான உறவு குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
வெளியுறவுச் செயலர், துபாய் தூதருக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்புவார் என நம்புகிறேன் என்றார்.
அத்துடன், இந்த சம்பவம் குறித்து பேசிய மூத்த நீதிபதி ஒருவர், ராஜ குடும்பத்தின் நண்பரான ஷேக் மொஹ்மத், நம்பிக்கை துரோகம் செய்துள்ளதுடன், அதிகார துஷ்பிரயோகமும் செய்துள்ளார் என்றார்.
இதற்கிடையில், மகாராணியாரின் நீண்ட கால நண்பரான ஷேக் மொஹ்மத் பிரித்தானிய தொலைபேசியை ஹேக் செய்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளதால், மகாராணியார் அவருடனான நட்பைத் துறக்கும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார்.
ஆகவே, இனிமேல், குறைந்தபட்சம் பொது இடங்களிலாவது மகாராணியார் துபாய் மன்னரான ஷேக் மொஹ்மதுடனான நெருக்கத்தைத் தவிர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.