பிரித்தானிய பிரதமர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம்?: பிரதமர் போட்டியில் மீண்டும் போரிஸ் ஜான்சனை சேர்க்க கோரிக்கை
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் போரிஸ் ஜான்சனையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்று கோரி சுமார் 10,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் திடீர் திருப்பம் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் அப்பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் அகற்றப்பட்டுள்ள விடயம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களையும், பொதுமக்களையும் கோபமடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, அதாவது அவரையும் பிரதமர் வேட்பாளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி Lord Cruddas, David Campbell-Bannerman என்னும், இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உருவாக்கியுள்ள மனு ஒன்றில், இதுவரை 9.150 கன்சர்வேட்டிவ் கட்சியினர் கையெழுத்திட்டுள்ளனர்.
Credit: Alamy
சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து போரிஸ் ஜான்சனை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள Lord Cruddas, அது போரிஸ் ஜான்சனை பிரதமராக தேர்ந்தெடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பங்களுக்கு எதிரானதாகும் என்றார்.
இது ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு சமம் என்று கூறும் Lord Cruddas, நவயுக ஜனநாயகம் பிறந்த இடமான பிரித்தானியாவிலேயே இப்படி ஒரு விடயம் நடப்பதைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன் என்கிறார்.
ஆகவே, பிரதமருக்கான போட்டியில் தற்போது நிற்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்ஸுடன் போரிஸ் ஜான்சனையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், பிரதமர் தேர்தலில் எதிர்பாராத திருப்பங்களை எதிர்பார்க்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Credit: PA