புதிய வீட்டுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம்: பின்னணியில் சர்ச்சைக்குரிய ஒருவர்?
பிரித்தானிய மகாராணியாரும், தங்கள் பாட்டியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் அருகில் வாழ்வதற்காக, இளவரசர் வில்லியம் குடும்பம், இதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டை விட்டுவிட்டு, விண்ட்சரில் உள்ள ஒரு வீட்டுக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வீட்டின் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது. இளவரசர் ஹரியைப் போலவே, விவாகரத்தான அமெரிக்கப் பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் தனது ராஜ பதவியை இழந்த ஒருவருடைய வீடு அது.
ஆம், வேல்ஸ் இளவரசராக இருந்தவரான எட்டாம் எட்வர்ட் அந்த வீட்டில்தான் வாழ்ந்தார். அவர் Wallis Simpson என்னும் விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மணம் முடிப்பதில் பிடிவாதமாக இருந்ததால், மன்னராக பதவியேற்று 11 மாதங்களே ஆன நிலையில், தன் பதவியைத் துறக்கவேண்டியதாயிற்று.
மகாராணியாரின் அருகில் இருப்பதற்காக அந்த மாளிகைக்கு இளவரசர் வில்லியம் குடும்பம் குடிபெயர இருப்பதாகவும், பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் வில்லியம் கேட் தம்பதி இறங்கியுள்ளதாகவும் சமீபத்தில் சில தகவல்கள் வெளிவந்தன.
இதற்கிடையில், பருவம் எய்தாத இளம்பெண் ஒருவருடன் பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டு வந்த இளவரசர் ஆண்ட்ரூ, மகாராணியாருடன் அதிக நேரம் செலவிடுவதாலேயே, மகாராணியாருக்கு அருகில் தாங்கள் இருப்பதற்காக வில்லியம் தம்பதியர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.