கவனிக்காமல் இருட்டில் மனைவி மீது காரை ஏற்றிவிட்டதாக கூறியுள்ள பிரித்தானியர்: கொலைக் குற்றச்சாட்டு பதிவு
தென்மேற்கு பிரான்சில் தன் மனைவி மீது வேண்டுமென்றே காரை ஏற்றிக் கொன்றதாக பிரித்தானியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Prayssac என்ற இடத்தில், David Turtle (67) என்ற பிரித்தானியர், தன் மனைவியான Stephanie (60)உடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, அவர் மீது வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் காரை ஏற்றிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், அது ஒரு விபத்து, தான் வேண்டுமென்றே தன் மனைவியைக் கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளார் David.
2017ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 30ஆம் திகதி சம்பவ இடத்துக்கு அவசர உதவிக்குழுவினர் விரைந்த நிலையில், எவ்வளவோ முயன்றும் அவர்களால் படுகாயமடைந்திருந்த Stephanieயைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
தங்கள் இருவருக்கும் அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தான் வீட்டை விட்டு வெளியேறி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டதாக தெரிவித்துள்ள David, தன் மனைவி தன் பின்னால் வரும் சத்தம் தனக்குக் கேட்டதாகவும், ஆனால் இருட்டில் அவர் வந்தது தெரியவில்லை என்றும், சிறிது தூரம் சென்றபிறகே, தனது மனைவி காருக்கடியில் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தம்பதியர், 2016ஆம் ஆண்டு, பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு குடிபெயர்ந்திருந்தனர்.
நேற்று துவங்கிய இந்த வழக்கு விசாரணை, மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.