தாலிபான்களுக்கு எதிராக போரிட்டு மரணமடைந்த பிரித்தானிய வீரர்களின் எண்ணிக்கை: வெளிவரும் தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் மொத்தமும் வெளியேறவிருக்கும் நிலையில் பிரித்தானிய படைகளும் வெளியேற உள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து எதிர்வரும் செப்டம்பர் 11 திகதிக்குள் அமெரிக்க துருப்புகள் அனைத்தும் வெளியேறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க பிரித்தானிய ராணுவம் பயன்படுத்திய அகாடமியை புதிய அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க ராணுவத்தின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், சுமார் 750 பிரித்தானிய ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் அல்லல்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, கடந்த 2015 ஜூலை மாதம் வரையில் ஆப்கானிஸ்தானில் 454 பிரித்தானிய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதும்,
இதில் 405 பேர்கள் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் 49 பேர்கள், நோய்வாய்ப்பட்டு, அல்லது விபத்தில் சிக்கி பலியானதாகவும் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும், ஆப்கானிஸ்தான் தலைநகரில் முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் மட்டுமே பிரித்தானிய ராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர்.
அமெரிக்காவை பொறுத்தமட்டில், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 100,000 துருப்புகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியிருந்தது. இந்த நிலையில், பராக் ஒபாமா அரசு தாலிபான்களை தோற்கடித்து ஆப்கானிஸ்தானில் இருந்து துரத்தியது.
ஆனால் டிரம்ப் நிர்வாகம் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தானில் வெறும் 2,500 வீரர்களை மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.