தனியார் நிறுவனத்தால்...மாணவர்களை உளவு பார்க்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள்
பிரித்தானியாவில் பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள், மாணவர் போராட்டக்காரர்களையும் கல்வியாளர்களையும் உளவு பார்ப்பதற்காக, ஒரு தனியார் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தி வந்ததாக தகவல் கசிந்துள்ளது.
மாணவர்கள், கல்வியாளர்கள்
இதில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று முன்னெடுத்த விசாரணையில், இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

ஹோரஸ் செக்யூரிட்டி கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனமானது மாணவர்களின் சமூக ஊடகப் பதிவுகளைத் துருவி ஆராய்ந்து, பிரித்தானியாவின் மிகவும் உயர்மட்ட கல்வி நிறுவனங்கள் சிலவற்றின் சார்பில், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த ரகசிய மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.
ஹோரஸ் நிறுவனத்திற்கு, 2022 முதல் பல்கலைக்கழகங்களிடமிருந்து குறைந்தபட்சம் 440,000 பவுண்டுகள் தொகை மணவர்களை உளவு பார்ப்பதற்காக செலுத்தப்பட்டுள்ளது.
கண்காணிக்கப்பட்டவர்களில், மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரை ஆற்ற அழைக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய கல்வியாளரும், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் காஸா ஆதரவு முனைவர் பட்ட மாணவரும் அடங்குவர்.
2024 அக்டோபரில், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், எந்த மாணவர் போராட்டக் குழுக்கள் குறித்து எச்சரிக்கைகளைப் பெற விரும்பியது என்ற பட்டியலை ஹோரஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.
அதில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் விலங்குரிமை ஆர்வலர்கள் அடங்கியிருந்தனர். மொத்தத்தில், 12 பல்கலைக்கழகங்கள் வளாகப் போராட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க அந்த நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியுள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இம்பீரியல் கல்லூரி லண்டன், பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் (UCL), கிங்ஸ் கல்லூரி லண்டன் (KCL), ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம், லெய்செஸ்டர் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக, உளவு நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தியதாக ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களின் தரவுகளை ஹோரஸுடன் பகிரவில்லை என்றும், தனிநபர்களைக் கண்காணிக்க அதற்கு அறிவுறுத்தவில்லை என்றும், சட்டப்பூர்வமான போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாதுகாப்பான சூழலைப் பேணுவதே தங்களின் முன்னுரிமை என்றும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
ஹோரஸ் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியது மாணவர்களைக் கண்காணிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்று இம்பீரியல் காலேஜ் லண்டன் விளக்கமளித்துள்ளது.
ரஷ்யாவும் ஈரானும்
அதேபோல், தங்கள் கல்வி நிறுவனம் கருத்துச் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதாகவும், தங்களது வளாகங்களுக்கு அருகாமையில் நடைபெறக்கூடிய போராட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட, தங்களது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிய ஹோரஸைப் பயன்படுத்துவதாகவும் கூறியது.
ஹோரஸ் நிறுவனம், 2006-ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவின் ஒரு திட்டமாக, முன்னாள் லெப்டினன்ட்-கர்னல் ஜொனாதன் வைட்லியால் நிறுவப்பட்டது.

2020-ல், கர்னல் டிம் காலின்ஸ் அதன் தாய் நிறுவனத்தின் இயக்குநரானார். சமீபத்திய ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் காஸா ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்து வருவதற்கு, ரஷ்யாவும் ஈரானும் இணைந்து திட்டமிட்ட ஒரு ஊடகப் பிரச்சாரமே காரணம் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறார்.
பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பல்வேறு துறைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, அந்த நிறுவனத்திற்கு ஜனவரி 2022 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 443,943 பவுண்டுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |