மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு புடினுடைய படைகளுடன் போராடுவதற்காக உக்ரைன் சென்றுள்ள பிரித்தானியர்
பொழுதுபோக்குவதற்காக பறவைகளைப் பார்ப்பதற்காக செல்வதாக தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, ரஷ்யப் படைகளுடன் போரிடுவதற்காக உக்ரைனுக்குச் சென்றுவிட்டார் பிரித்தானியர் ஒருவர்!
முன்னாள் இராணுவ வீரரான அவர், இராணுவப் பயிற்சி பெற்ற தன்னால் உக்ரைனில் நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை என்கிறார்.
தன் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்று கூறும் அவர், ஒரு கணவனாக, தந்தையாக தான் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றிவிட்டதாகவும், தன்னால் உயிருடன் பிரித்தானியாவுக்குத் திரும்ப வரமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார்.
பறவைகளைப் பார்ப்பதற்காக (birdwatching) தான் செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு தான் உக்ரைன் புறப்பட்டுவிட்டதாகவும், தன் மனைவிக்கு உண்மை தெரிந்தால் சத்தம் போடப்போகிறாள் என்றும் கூறும் அவர், தற்போது போலந்தை வந்தடைந்துள்ளார்.
நான் உக்ரைன் சென்ற பிறகு அவளை தொலைபேசியில் அழைத்து உண்மையைச் சொல்லப்போகிறேன் என்கிறார் அவர்.
அவரைப் போலவே, பலர் உக்ரைன் வீரர்களுக்கு உதவியாக போரிடுவதற்காக சென்று கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தரணிகள், அப்படி போரிடச் செல்லும் பிரித்தானியர்கள் பிரித்தானிய தீவிரவாதச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குள்ளாக நேரிடலாம் என எச்சரிக்கிறார்கள்.
அதேபோல, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் உக்ரைனுக்கு போரிடச் செல்லும் பிரித்தானியர்கள், பிரித்தானிய சட்டத்தை மீறுவதாக கருதப்படலாம் என எச்சரித்துள்ளார்.
மேலை நாட்டவர்கள் பலர், பல்வேறு பறவைகள் வந்தடையும் இடங்களுக்குப் பயணித்து, நாள் கணக்கில் செலவிட்டு, தாங்கள் மொத்தம் எத்தனை வகை பறவைகளைப் பார்த்திருக்கிறார்கள் என கணக்கிடுவார்கள். இதில் ஒருவருக்கொருவர் போட்டியே ஏற்படும். அதைத்தான் அவர்கள் Birdwatching என்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.