இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண்: சடலமாக மீட்பு
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியப் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணி
இந்தியாவின் கோவாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியப் பெண்ணான எம்மா லூயிஸ் ( Emma Louise Leaning, 46), தான் தங்கியிருந்த அறையின் அருகிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
எம்மா, கோவாவிலுள்ள பிரபல சுற்றுலாத்தலமான அகோண்டா கடற்கரைக்கருகிலுள்ள அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று முன் தினம், அதாவது, 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, தான் தங்கியிருந்த அறையை ஒட்டியுள்ள காம்பவுண்ட் சுவரின் அருகே எம்மா உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பொலிசாரின் கருத்து
உள்ளூர் மக்கள் எம்மாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், பொலிசாரோ, எம்மாவின் மொபைல் போன், பாஸ்போர்ட் உட்பட அனைத்து உடைமைகளும் பத்திரமாக இருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், ஆகவே, அவரது மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.
எம்மா, பல ஆண்டுகளாகவே கோவாவுக்கு சுற்றுலா வருவதுண்டாம். அவருடன் வந்துள்ள மற்ற நண்பர்களும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள்.
எம்மா காம்பவுண்ட் சுவருக்கு அருகே உயிரிழந்து கிடந்ததால், அவர் சுவரில் ஏற முயன்று கீழே விழுந்திருக்கலாம் என்றும், கீழே விழுந்ததில் அவரது கழுத்து எலும்பொன்று உடைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எப்படியும், அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதால், ஆய்வின் முடிவுகளில் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |