மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல்
மூட்டைப் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட பிரித்தானிய பெண்ணொருவர் எடுத்த நடவடிக்கை, விலைமதிப்பில்லாத ஒரு சிறுமியின் உயிரை பலிவாங்கிவிட்டது.
மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பெண்
கிழக்கு லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்துள்ளார் ஜெஸ்மின் அக்தர் (Jesmin Akter, 34) என்னும் பெண். அந்த கட்டிடத்தில் கடுமையான மூட்டைப் பூச்சி தொல்லை இருந்துள்ளது.
குடியிருப்பின் சொந்தக்காரர் ஆட்களை வைத்து மூட்டைப்பூச்சி மருந்து தெளிக்கவைத்திருக்கிறார். ஆனால், அந்த ஆட்கள் மூட்டைப்பூச்சி ஒழிப்பில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்.
ஆகவே, தானே எதையாவது செய்தால்தான் இந்த பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என முடிவு செய்த ஜெஸ்மின், இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக ரசாயனம் ஒன்றை வரவழைத்துள்ளார்.
அந்த ரசாயத்தை வீட்டில் தெளித்துவிட்டு, குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற ஜெஸ்மின், 24 மணி நேரத்துக்குப் பின்பே வீடு திரும்பியுள்ளார். ஆனால், அதற்குள் ஒரு பயங்கரம் அரங்கேறியிருந்தது.
பக்கத்து வீட்டில் நிகழ்ந்த பயங்கரம்
ஜெஸ்மின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில், ஃபத்திஹா சப்ரின் (Fatiha Sabrin, 11) என்ற சிறுமி தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார். அன்று அவருக்கு பிறந்தநாள். ஆனால், அதிகாலை 4.00 மணிக்கே எழுந்த ஃபத்திஹா, தனக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டதாக தன் தாயிடம் கூறியிருக்கிறாள்.
உடனே அவர் அவசர உதவியை அழைக்க, அவர்கள் வயிற்றுப்போக்குக்கு மருந்து சாப்பிட ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
1.30 மணிக்கு ஃபத்திஹாவின் நிலைமை மோசமாக, மீண்டும் அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைக்க, அவர்கள் வந்தபோது ஃபத்திஹா மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்திருக்கிறாள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஃபத்திஹா, மாலை 5.30 மணிக்கு உயிரிழந்துவிட்டாள்.
நடந்தது என்ன?
விடயம் என்னவென்றால், ஜெஸ்மின் வாங்கிய அந்த ரசாயனத்தை குறைந்த அளவிலேயே பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அவர் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலே, மிக அதிகமாக பயன்படுத்த, அந்த ரசாயனம் காற்றிலுள்ள ஈரத்துடன் கலந்து, ரசாயனப் போரில் பயன்படுத்தப்படும் நச்சுப்புகை ஒன்றை உருவாக்கிவிட்டது.
அந்தப் புகை பக்கத்துவீட்டுக்கும் பரவ, பிறந்தநாள் கொண்டாடவேண்டிய ஃபத்திஹா, உயிரிழந்துவிட்டாள்.
ஜெஸ்மினுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, ஜெஸ்மினின் நன்னடத்தை குறித்து பலர் சாட்சியமளித்ததாலும், அவரையறியாமலே அவர் செய்த தவறால்தான் இந்த துயரம் நிகழ்ந்ததாலும், அவர் இப்போதைக்கு தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஜெஸ்மின் மீண்டும் ஏதாகிலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவர் சிறை செல்லவேண்டிவரும் என்றும், என்றாலும், அவர் 150 மணி நேரம் ஊதியமின்றி உழைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |