செய்யாத குற்றத்துக்காக 17 ஆண்டுகள் சிறை: DNA சோதனையால் வெளியான உண்மை
பிரித்தானியர் ஒருவர், தான் செய்யாத குற்றத்துக்காக 17 ஆண்டுகள் சிறையில் வாடிய நிலையில், தற்போது அவர் குற்றவாளியல்ல என்பது DNA பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சிறையில் வீணான 17 ஆண்டுகள்
இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த Andrew Malkinson (57) என்பவர் மீது, 2003ஆம் ஆண்டு, 33 வயது பெண் ஒருவரை வன்புணர்ந்து, அவரை சாலையோரம் சாகும் நிலையில் விட்டுச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது, அவர் குற்றவாளியல்ல என்பது DNA பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. குற்றம் செய்யாமலே பாலியல் குற்றவாளி என அவரது பெயர் பதிவு செய்யப்பட்டதுடன், அவரது வாழ்வின் விலைமதிப்பில்லாத 17 ஆண்டுகளும் சிறையில் வீணாகியுள்ளன.
பொலிசார் மீது குற்றச்சாட்டு
2003ஆம் ஆண்டே பொலிசாரிடம் தான் நிரபராதி என்று கூறியும் அவர்கள் நம்பவில்லை என்று கூறும் Andrew, பின்னர் மூன்று முறை மூன்று நீதிமன்றங்களில் தான் நிரபராதி என்று கூறியும் அவர்களும் நம்பவில்லை என்கிறார்.
இதற்கிடையில், Andrewவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்காக தாங்கள் வருந்துவதாக பொலிசார் தெரிவிக்க, அது முறையான மன்னிப்புக்கோருதல் அல்ல என்று கூறி அதை ஏற்க மறுத்துள்ளார் அவர்.
DNA சோதனையால் வெளியான உண்மை
இதற்கிடையில், DNA பரிசோதனையில், தாக்குதலுக்குள்ளான பெண்ணின் உடைகளில் மற்றொரு நபரின் DNA கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு Andrewவுக்கு நீதி கிடைத்துள்ளது என்றாலும், அதே நேரத்தில் அவரது வாழ்வின் 17 ஆண்டுகள் வீணாகிப்போனதை மறுப்பதற்கில்லை.
அத்துடன், தன்னை வன்புணர்ந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்ற நிம்மதியிலிருந்த பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கும், தற்போது அவர் குற்றவாளி இல்லை என்பது தெரியவந்துள்ளதால் தன்னை வன்புணர்ந்த உண்மையான குற்றவாளி கிடைக்காததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |