சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் பிரித்தானியர்களுக்கு ஒரு நல்ல செய்தி... கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் அல்லது சுவிட்சர்லாந்துக்கு வருகை புரியும் பிரித்தானியர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சுவிட்சர்லாந்தும் பிரித்தானியாவும் செய்துகொண்டுள்ள ஒரு ஒப்பந்தத்தின்படி, சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் அல்லது சுவிட்சர்லாந்துக்கு வருகை புரியும் பிரித்தானியர்கள், சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து மருத்துவ, ஓய்வூதிய மற்றும் சமூக பாதுகாப்பு பலன்களை அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேற்று லண்டன் வந்த சுவிஸ் உள்துறை அமைச்சரான Alain Berset, இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
அத்துடன், மக்கள் இது தொடர்பான தங்கள் பங்களிப்பை ஏதாவது ஒரு நாட்டிற்கு அளித்தால் போதும். அதாவது, கட்டணங்களை ஒரு நாட்டில் மட்டும் செலுத்தினால் போதும்.
பிரெக்சிட்டைத் தொடர்ந்து பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் வர்த்தகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இன்னொரு விடயம், இந்த ஒப்பந்தத்தின்படி கிடைக்கும் பலன்கள், சுவிட்சர்லாந்தில் வாழும் பிரித்தானியர்களுக்கு மட்டுமல்ல, பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் குடிமக்களுக்கும் பொருந்தும்.
சுமார் 77,500 சுவிஸ் மற்றும் பிரித்தானிய குடிமக்கள், பரஸ்பரம் இரு நாடுகளிலும் வாழ்கிறார்கள் என்பதால், இது இரு சாராருக்கும் பலனளிக்கும் ஒரு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.