வலுவான காரணம் வேண்டும்... பிரித்தானியர்களுக்கு தடை போட்ட பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டுக்குள் பயணப்படும் அனைத்து பிரித்தானியர்களும் இன்று முதல் வலுவான காரணங்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் இந்திய மாறுபாட்டை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள இமானுவல் மேக்ரான் நிர்வாகம், இன்று முதல் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பிரான்ஸ் மக்கள் மட்டுமே நாட்டினுள் அனுமதிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
மேலும், பிரித்தானிய மக்கள் வலுவான காரணங்கள் குறிப்பிட்டால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிக்கப்படும் பிரித்தானியர்கள் பயணத்திற்கு முன்னர் கொரோனா சோதனை முன்னெடுத்திருக்க வேண்டும், மட்டுமின்றி 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நிர்வாகத்தின் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விமான பயணிகள், சாலை மார்க்கம் செல்பவர்கள் மற்றும் படகு மூலம் செல்பவர்கள் என அனைத்து பிரித்தானியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானிய அரசால் தற்போது ஆம்பர் பட்டிகையில் பிரான்ஸ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்கள் கண்டிப்பாக இருமுறை கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.