கொரோனா அதிகரிப்பால் அதிரடி அறிவிப்பு: விரக்தியில் நாடு திரும்பும் பிரித்தானியர்கள்!
பிரித்தானிய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பின் காரணமாக, சுற்றுலாவுக்காக போர்ச்சுகல் நாட்டுக்கு சென்றிருந்த பிரித்தானியர்கள் விரக்தியுடன் நாடு திரும்பி வருகின்றனர்.
எந்த பயணத் தடையும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளும் இல்லாமல் சுற்றுலா சென்று வர அறிவிக்கப்பட்ட பச்சை நிற நாடுகளின் பட்டியலில் போர்ச்சுகல் நாடும் இருந்தது. இதனால் பிரித்தானியர்கள் பலரும் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்க போர்ச்சுகலில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்தனர்.
ஆனால், அந்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், வரும் செவ்வாய்க்கிழமை முதல் போர்ச்சுகல் நாட்டை மீண்டும் மஞ்சள் நிற நாடுகளின் பட்டியலில் சேர்ப்பதாக பிரித்தானிய அரசு கடந்த வாரம் அறிவித்தது.
மஞ்சள் நிற பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்று வரும் மக்கள், நாடு திரும்பியவுடன் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதனை தவிர்ப்பதற்காக, சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்ட பலர், கிடைக்கும் விமானத்தில் ஏறி நாடு திரும்பி வருகின்றனர்.
இதனால், போர்ச்சுகல் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பிரித்தானியர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பிரித்தானியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.