வெறும் ரூ 5,000 முதலீட்டில் தொடங்கிய வியாபாரம்... இன்று ஆண்டு வருவாய் ரூ 12,000 கோடி: சாதிக்கும் தமிழர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்த சகோதரர்கள் இருவர் ரூ 5000 முதலீட்டில் தொடங்கிய வியாபாரம் இன்று நாட்டின் 18 மாகாணங்களில் வியாபித்துள்ளதுடன் ஆண்டுக்கு ரூ 12,000 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.
இரு சகோதரர்கள் இணைந்து
கோயம்புத்தூரை சேர்ந்த பி சௌந்தரராஜன் மற்றும் ஜிபி சுந்தரராஜன் ஆகிய இரு சகோதரர்கள் இணைந்து 1984ல் சுமாரான முதலீட்டில் கறிக்கோழி பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 72 கி.மீ தொலைவில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டையில் இவர்களின் முதல் பண்ணை நிறுவப்பட்டது. நீண்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது இவர்கள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 12,000 கோடியை தாண்டியுள்ளது.
சுகுணா ஃபுட்ஸ் என்ற மிகப் பிரபலமான இவர்களின் நிறுவனத்தில் 18 மாகாணங்களில் இருந்து சுமார் 40,000 கோழி வளர்ப்பு விவசாயிகள் இணைந்து பணியாற்றுகின்றனர். 18 மாகாணங்களில் வியாபித்துள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவராக பி சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார்.
இவரது மகன் விக்னேஷ் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் அதன் அதிகபட்ச வருவாயை நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து பெறுகிறது.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் காய்கறி வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் சௌந்தரராஜன். ஆனால் போதிய வருவாய் ஈட்ட முடியாமல் போயுள்ளது. தொடர்ந்து ஐதராபாத் நகரில் ஒரு வேளாண் தொடர்பான நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
மூன்று விவசாயிகளுடன்
இதன் பின்னரே, சகோதரருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொடக்க நாட்களில் விவசாயிகளுக்கு கோழிகளை விற்பனை செய்வதை மட்டுமே வியாபாரமாக செய்து வந்துள்ளனர்.
ஆனால் அதன் பின்னர் கோழி வளர்ப்பில் இருக்கும் சவால்களை புரிந்துகொண்டு சொந்தமாக பண்ணை ஒன்றை நிறுவியுள்ளனர். தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
1990ல் வெறும் மூன்று விவசாயிகளுடன் இணைந்து தங்களுக்கு என பண்ணையை நிறுவியுள்ளனர். அந்த விவசாயிகள் கறிக்கோழிகளை இவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அடுத்த 7 ஆண்டுகளில் 40 விவசாயிகள் இவர்களுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.
அப்போது சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ 7 கோடி என இருந்தது. படிப்படியாக தமிழ்நாட்டின் பிரபலமான நிறுவனமாக சுகுணா ஃபுட்ஸ் மாறியது. 2021ல் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 9,155 கோடி என்றே கூறப்படுகிறது.
2020ல் ஆண்டு வருவாய் ரூ 8739 கோடி என இருந்தது. 2021ல் இவர்களின் இலாபம் மட்டும் ரூ 358.89 கோடி என கூறப்படுகிறது. 2023ல் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ 12,000 கோடி என்று தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |