பக்கிங்ஹாம் அரண்மனையை வாடகைக்கு எடுத்தால், எவ்வளவு செலவாகும் தெரியுமா?
நீங்கள் பிரித்தானிய அரச குடும்பத்தை போல் வாழ விருப்பப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையை மட்டும் வாடகைக்கு எடுக்க நினைத்தால் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரிந்தால் நிச்சயம் வாயை பிளப்பீர்கள்.
இது குறித்து McCarthy Stone ஒரு ஆய்வாய் மேற்கொண்டது. அதன்படி, 775 அறைகள் கொண்ட பக்கிங்ஹாம் அரண்மனையை அரச குடும்பத்தினர் வாடகைக்கு கொடுக்க முன்வந்தால், 2.6 மில்லியன் பவுண்டுகள் (3.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) கொடுக்கவேண்டியிருக்கும்.
ஏனெனில், பக்கிங்ஹாம் அரண்மனையின் மதிப்பு மட்டுமே 1.3 பில்லியன் பவுண்டுகளாகும்.
அதுவே அரச குடும்பத்தின் பெயரில் இருக்கும் மாளிகைகள், விடுதிகள் எல்லாம் சேர்த்தால் 3.7 பில்லியன் பவுண்டுகளாம். 2019-ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டதில் இருந்து இப்போது 460 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கூடியுள்ளதாம்.
ஒவ்வொரு சொத்தின் அளவு, அறைகளின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் மதிப்பாய்வின் அடிப்படையில் மதிப்பீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதிப்பாய்வு செய்யப்பட்ட எந்த ஒரு சொத்தும் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு விடப்பட வாய்ப்பில்லை. ஏனென்னில், அரச அரண்மனைகள் ஹவுஸ் ஆஃப் விண்ட்சரின் தனிப்பட்ட சொத்து அல்ல. மாறாக அவை பிரித்தானியாவின் சொத்து மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான நம்பிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் ராணியின் பிளாட்டினம் விழாவைக் கொண்டாட இங்கிலாந்து தயாராகி வரும் நிலையில் இந்த ஆய்வு வந்துள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை 1703-ம் ஆண்டில் ஜான் ஷேஃபீல்ட் மன்னருக்காகக் கட்டப்பட்டது. பின்னர் மூன்றாம் கிங் ஜார்ஜ், அரசி சார்லேட்டுக்காக வாங்கினார். 19-ம் நூற்றாண்டில் இந்த அரண்மனை விரிவுபடுத்தப்பட்டது. குயின் விக்டோரியா 1837-ல் பொறுப்பேற்ற பின்பு இது அரச குடும்பத்தின் மாளிகையானது.