பிரியங்கா காந்தியின் கன்னத்தை போன்று சாலை அமைப்பேன்.., பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு
எம்பி பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என்று டெல்லி பாஜக வேட்பாளர் சர்ச்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பேச்சு
இந்திய தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் அரசான ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் அதிஷியின் கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி என்பவரும் போட்டியிடுகின்றனர்.
இதில், பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் ரமேஷ் பிதுரி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
அப்போது இவர் வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தியை பற்றி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் பிரச்சாரத்தில், "பீகார் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் அமைப்பேன் என்று லாலு பிரசாத் கூறினார். ஆனால், அவரால் அதை செய்ய முடியவில்லை.
ஆனால் நான், ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதி சாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னங்களை அமைப்பேன்" என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.
இவரின் கருத்துக்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "எம்பி பிரியங்கா காந்தி குறித்த ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம்.
பெண்களுக்கு எதிரான பேச்சு மற்றும் சிந்தனையின் தந்தையே பிரதமர் மோடிதான். ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |