பின்னோக்கி தள்ளப்பட்ட ஜஸ்ப்ரிட் பும்ரா! வெளியான ஐசிசி ஒருநாள் தரவரிக்கான பவுலர்களின் பட்டியல்
ஒருநாள் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ரா பின்னோக்கி சென்றுள்ளார்.
இந்திய அணியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் ஜஸ்ப்ரிட் பும்ரா. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை தேடித் தந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டிலிருந்தே உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் குறைந்ததால், பும்ராவால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இதையடுத்து தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து அணியை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை வங்கதேசம் ஒருநாள் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த மெஹதி ஹாசன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா மூன்று இடங்கள் பின் தங்கி ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். பும்ராவின் இந்த சறுக்கலுக்கு அவருடைய திருமணம் தான் என்று பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியதற்கு பின்னர் தனது திருமணம் நடைபெற்ற காரணத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை.
தற்போதும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல இருப்பதால் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் ஒருநாள் தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாது. இதன் காரணமாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் மேலும் அவர் பின்னடைவை சந்திக்க வாய்ப்பு உள்ளது.