பிரித்தானிய நிதி அமைச்சராக பதவி உயர்வு பெறும் ஷபானா மஹ்மூத்
பிரித்தானியாவில், உள்துறைச் செயலராக அதிரடி புலம்பெயர்தல் கொள்கைகளை முன்வைத்த ஷபானா மஹ்மூத், நாட்டின் நிதி அமைச்சராக பதவி உயர்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சராகும் ஷபானா மஹ்மூத்
பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்தவரான ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

ஆன்டி பர்னாம், வரும் திங்கட்கிழமை, லேபர் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
ஆன்டி பர்னாம் பிரதமராக பொறுப்பேற்றதும், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர்ந்தோரை கலங்கடித்துவரும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதுக்கு, பிரித்தானியாவின் நிதி அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக ஆன்டி பர்னாமுக்கு நெருக்கமான சிலரை மேற்கோள் காட்டி Financial Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது ஷபானாவுக்கு பதவி உயர்வு என கூறப்பட்டாலும், இன்னொரு பக்கம், உள்துறையில் கவனம் ஈர்க்கும் வகையில் செயல்பட்ட ஷபானாவுக்கு, பொருளாதாரக் கொள்கையில் பெரிதாக அனுபவம் இல்லை என இப்போதே ஊடகங்கள் எழுதத் துவங்கிவிட்டன.
ஆக, ஸ்டார்மரின் வீழ்ச்சிக்கு அவர் புலம்பெயர்தலைக் கையாண்ட விதம் மட்டுமல்ல, அவரது பொருளாதாரக் கொள்கைகளும்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அனுபவம் குறைந்த ஷபானா எப்படி நிதி அமைச்சராக சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |