தொல்லையாக மாறிவிட்ட EES திட்டம்: புதிய பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வார இறுதி நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிட்ட EES திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Entry/Exit System (EES)
Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஐரோப்பாவுக்கு, அல்லது வேறு வகையில் கூறினால், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லைகளில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், பிரித்தானியர்களுக்கும் EES திட்டம் பெரும் தொல்லையாக மாறியுள்ளது.
ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், இந்த EES திட்டத்தை இடைநிறுத்த, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்துமாறு பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாமுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் வெளி விவகாரங்கள் செய்தித் தொடர்பாளரான கேலம் மில்லர் (Calum Miller), பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அழைத்து, இந்த குழப்பமான, ஒழுங்காக செயல்படாத எல்லை திட்டத்தைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 2.2 மில்லியன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவிற்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், EES திட்டத்தால் சுற்றுலாப்பயணிகள் தண்டிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ள மில்லர், இந்த குழப்பமான, ஒழுங்காக செயல்படாத எல்லை திட்டத்தை, செப்டம்பர் மாதம் வரையாவது இடைநிறுத்துமாறு, பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |