புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: 17 பேர் மரணம்
மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் சென்ற பேருந்து
கொலம்பியா, வெனிசுலா மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மத்திய மெக்சிகோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக பியூப்லா அதிகாரிகள் தெரிவித்தனர்.
45 பயணிகளுடன் வடக்கு நோக்கிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விபத்து ஏற்பட்டதாக மெக்சிகோ உள்துறை அமைச்சர் ஜூலியோ ஹுயர்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அவர் கூறினார். மேலும் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பின்னர் இறந்தனர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Reuters
உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக மெக்சிகோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, தெற்கு மெக்சிகோ எல்லை நகரமான டபச்சுலாவிலிருந்து மெக்சிகோ நகருக்குச் சென்று கொண்டிருந்த 'டூர்ஸ் டூரிஸ்டிகோ மீடியா' என்ற தனியார் பேருந்துகளில் ஒரு பேருந்து கவிழ்ந்தது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் எத்தனை பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதை பியூப்லா மாநில அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
இறந்தவர்களில் 56 வயதான கொலம்பிய ஆடவரும் அடங்குவதாக கொலம்பிய அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்தவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடையாத கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு ஆண் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்குச் செல்வதற்காக மெக்சிகோவைக் கடக்க பெரும்பாலும் ஆபத்தான வழிகளை மேற்கொள்கின்றனர்.
இதேபோல் கடந்த வாரம், பனாமாவில் பயணித்த பேருந்து குன்றின் மீது விழுந்ததில் 39 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டனர்.