மாணவர்களின் இலவச கல்விக்காக ரூ.100 கோடியை அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்
தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் இலவச கல்வி பெற வேண்டும் என்பதற்காக தொழிலதிபர் ஒருவர் ரூ.100 கோடி நிதியுதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.100 கோடி நிதியுதவி
இந்திய மாநிலமான குஜராத், நிஸ்ரயா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் மகேந்திரா மேக் படேல் (86). இவர், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவுப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இதையடுத்து, அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது சொந்த கிராமமான நிஸ்ரயாவிற்கு அதிநவீன உயர்நிலைப் பள்ளி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்று ரூ.100 கோடி நிதியுதவியையும் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிகள் எதுவும் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் உயர்நிலைப் படிப்பு படிக்க அருகில் இருக்கும் நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்தியன் வங்கியில் 75 கோடி ரூபாய் வைப்பு நிதி செய்திருந்த பணத்தை கிராமத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தவுள்ளேன்" என்றார்.
இவர் கடந்த 6 மாதங்களில் கிராமத்தில் உள்ள 70 பேரின் கல்லூரிப் படிப்புக்காக 30 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, கிராமத்தில் வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சி.சி.டி.வி., கேமராக்கள் வைப்பது போன்ற உதவிகளையும் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |