சீமானுடன் கூட்டணி குறித்து தலைவர் விஜய் முடிவெடுப்பார்! தவெக பொதுச்செயலாளர் விளக்கம்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழருடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
''சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அவசரமே வேண்டாம். நாங்கள் இப்போதே மக்கள் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். சீமானின் நாம் தமிழர் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தலைவர் விஜய் முடிவெடுப்பார்.
நாங்கள் எங்கள் தலைவர் கூறும் பணிகளை செய்துகொண்டே இருக்கிறோம். அடுத்ததாக நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறக்கப்படும். 18ஆம் திகதி எந்த ஒரு நிர்வாகிகள் கூட்டமும் இல்லை. அந்த தகவல் எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை'' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |