40 மில்லியன் கனேடிய டொலர் லொட்டரி பரிசு: உரிமைகோர யாரும் வராததால் ரத்தாகும் வாய்ப்பு
C$40 Million Jackpot winner does not step forward in Canada: கனடாவில் C$40 million அளவிலான பிரம்மாண்ட லொட்டரி பரிசுத் தொகையை யாரும் உரிமை கோராத நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் இந்த பரிசுத் தொகை ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 மில்லியன் கனேடிய டொலர் பரிசுத் தொகை
சுமார் 40 மில்லியன் கனேடிய டொலர்(இந்திய ரூபாய் மதிப்பில் 270 கோடி) மதிப்பிலான பிரம்மாண்ட பரிசுத் தொகையை இதுவரை யாரும் உரிமை கோராமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒண்டாரியோவின் கிரே கவுண்டி பகுதியில் ஓராண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட லோட்டோ மேக்ஸ்(Lotto Maz) லொட்டரி சீட்டுக்கே இந்த பிரம்மாண்ட பரிசுத் தொகை கிடைத்துள்ள நிலையில், ஒண்டாரியோ லொட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன்(OLG) வெளியிட்ட அறிவிப்பு படி, புதன்கிழமை நள்ளிரவுடன் இந்த லொட்டரி சீட்டின் காலாவதி முடிவடைகிறது.

இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் சுமார் 40 மில்லியன் கனேடிய டொலர் என்ற பிரம்மாண்ட பரிசுத் தொகை ரத்தாகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிரே கவுண்டிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த லொட்டரி சீட்டை வாங்கி விட்டு, ஊர் திரும்பியதும் அதனை சரிபார்க்க மறந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
OLG செய்தி தொடர்பாளர் தெரிவித்த கருத்தில், கிட்டத்தட்ட ஓராண்டாக வெற்றியாளருக்காக காத்திருக்கிறோம். ஆனால் வெற்றி பெற்ற லொட்டரி சீட்டு ஒரு முறை கூட OLG செயலியிலோ அல்லது விற்பனை மையங்களிலோ சரிபார்க்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற லொட்டரி டிக்கெட்டின் எண்கள்: 06, 14, 17, 19, 26, 43, 45 மற்றும் போனஸ் எண் 26 ஆகும்.
நள்ளிரவு கெடுவுக்குள் லொட்டரியை வெற்றி நபர் வரவில்லை என்றால், இந்த 40 மில்லியன் கனேடிய டொலர் பரிசுத் தொகை அடுத்த லொட்டரி போட்டியின் பரிசு நிதிக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.