முடிவுக்கு வருகிறதா போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவி?: ஐந்தாவது உதவியாளர் ராஜினாமா!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் உதவியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலையில், ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு 50/50 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளதாக ஒரு கருத்து உருவாகியுள்ளது.
பிரதமர் இல்ல கொள்கைப் பிரிவு உறுப்பினரான Elena Narozanski என்பவர் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, இதுவரை பிரதமர் இல்லத்திலிருந்து அவரது உதவியாளர்கள் ஐந்து பேர் வெளியேறியாயிற்று.
இன்னும் சில பிரதமர் இல்லப் பணியாளர்களும், சில அமைச்சர்களும் கூட ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால், சில மூத்த அமைச்சர்கள், இது போரிஸ் ஜான்சனின் பதவிக்காலம் முடியும் நேரம் என கருதுவதாக கூறப்படுகிறது.
மக்கள், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் அன்பிற்குரியவர்களைக் கூட சந்திக்க இயலாமல் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட நேரத்தில், பிரதமர் இல்லத்தில் மதுபான பார்ட்டிகள் நடந்ததற்கான ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகவேண்டும் என குரல்கள் எழத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.