அதிகரிக்கும் எண்ணிக்கை... அமெரிக்க மாகாணம் ஒன்றில் அவசர நிலை பிரகடனம்
பறவைக் காய்ச்சல் என அறியப்படும் H5N1 வைரஸ் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
அவசர நிலை பிரகடனம்
வெளியான தகவலின் அடிப்படையில் கலிபோர்னியாவில் மட்டும் 34 பேர்களுக்கு பறவைக்காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பண்ணைகளில் கறவை மாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கவர்னர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில், இந்த முடிவானது கண்காணிப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்காகவும் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் மாகாணம் தழுவிய அவசர நிலையை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு காய்ச்சல் பரவியுள்ளதாக கலிபோர்னியாவில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், பாதிப்புக்கு உள்ளான 34 பேர்களும் பாதிக்கப்பட்ட கால்நடைகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்றே கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
16 மாகாணங்களில்
மேலும், நோய் பரவலை எதிர்கொள்ள நாட்டிலேயே மிகப்பெரிய சோதனை மற்றும் கண்காணிப்பு முறையை கலிபோர்னியா மாகாணம் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் CDC அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், மார்ச் 2024ல் டெக்சாஸ் மற்றும் கன்சாஸில் கண்டறியப்பட்ட H5N1 வைரஸ் தற்போது 16 மாகாணங்களில் கறவை மாடுகளிடையே பரவியுள்ளது என தெரிவித்துள்ளது.
அத்துடன் நாடு முழுக்க 61 பேர்களுக்கு H5N1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா பொது சுகாதாரத் துறை டிசம்பர் 13ம் திகதி வெளியிட்டுள்ள தகவலில், 33 பசுக்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
.