AI சாட்பாட்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க சட்டமியற்றியுள்ள அமெரிக்க மாகாணம்
AI சாட்பாட்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கலிபோர்னியா சட்டமியற்றியுள்ளது.
AI சாட்பாட்கள்
சேட்ஜிபிடி, ஜெமினி போன்ற AI சாட்பாட்களை, மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேவேளையில், AI சாட்பாட்களில் சில பாதகமான விடயங்களும் உள்ளது.
பயனர்கள் பலர், AI சாட்பாட்களை மனிதர்களாக நினைத்து தங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். சில நேரங்களில், பயனர்களை தற்கொலைக்கு தூண்டுவது, கொலை செய்து விடுமாறு அறிவுறுத்தியது போன்ற ஆபத்தான நிகழ்வுகள் நடந்துள்ளது.
போதைப்பொருள், மது மற்றும் உணவுக் கோளாறுகள் போன்ற தலைப்புகள் குறித்து சாட்பாட்கள் குழந்தைகளுக்கு ஆபத்தான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதனை பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, AI பயன்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென உலகளவில் குரல் எழுந்து வருகிறது.
கலிபோர்னியாவின் AI சட்டம்
இந்நிலையில், அமெரிக்காவில் முதல்முறையாக கலிபோர்னியா மாகாணம் குழந்தைகளை AI சாட்பாட்களிடமிருந்து பாதுகாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, குழந்தைகளாக உள்ள பயனர்களுக்கு, சாட்பாட்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை "நீங்கள் உரையாடுவது மனிதர்களுடன் அல்ல, சாட்பாட்டிடம்" என்ற எச்சரிக்கையை அனுப்ப வேண்டும்.
மேலும், சுய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நிறுவனங்கள் நெறிப்படுத்த வேண்டும். அதேபோல், பயனர்கள் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால் அவசர சேவை வழங்குநர்களிடம் பரிந்துரைக்க வேண்டும் போன்ற நெறிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த மசோதாவில் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் கையெழுத்திட்டுள்ள நிலையில், வரும் 1 ஜனவரி 2026 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |