மொத்தமாக 12 மில்லியன் மக்களைக் கொல்ல போதுமானது... சிக்கிய 60 வயது நபரால் அதிர்ச்சி
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்த ஒருவர் மொத்தம் 12 மில்லியன் மக்களைக் கொல்லும் அளவுக்கு ஃபெண்டானில் போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவின் புல்லர்டன் பகுதியை சேர்ந்த 60 வயது Alfonso Gomez-Santana என்பவரே போதை மருந்து வழக்கில் சிக்கியுள்ளார். இவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசாரிடம் சிக்கியுள்ள சந்தனா தனது வாகனத்தில் நான்கு கிலோ போதை மருந்தும், குடியிருப்பில் 20 கிலோவும் பதுக்கி வைத்திருந்துள்ளார். அத்துடன் $250,000 ஃபெண்டானில் மாத்திரைகள் மற்றும் 122 கிராம் மெத்தாம்பேட்டமைன் ஆகியவற்றைக் கண்டெடுத்ததாக ஆரஞ்ச் கவுண்டி மாவட்ட அட்டர்னி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2 மில்லிகிராம் அளவுக்கு ஃபெண்டானில் கூட உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய குறித்த போதைப்பொருள் வியாபாரியை புதனன்று சவுத் லெமன் ஸ்ட்ரீட் மற்றும் ஆரஞ்செதோர்ப் அவென்யூ அருகே கலிபோர்னியா பிரதானசாலை ரோந்துப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவருக்கு 6 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 12 மில்லியன் மக்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒருவர் சில வருடங்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்படுவது என்பது மனசாட்சிக்கு விரோதமானது என சமூக ஆர்வலர்கள் பலர் கடும் அஎதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஃபெண்டானில் பயன்பாட்டால் அமெரிக்காவில் 100,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
இந்த போதைப்பொருள் விற்பனையாளர்களும் மருந்து உற்பத்தியாளர்களும் இதனால் ஏற்படும் மரணத்திற்கு பொறுப்பேற்காத வரை இந்த விவகாரம் ஓயப் போவதில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2020ல், கிட்டத்தட்ட 4,000 கலிஃபோர்னியர்கள் ஃபெண்டானில் தொடர்பான பயன்பாட்டால் இறந்தனர். 2021ம் ஆண்டுக்கான தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.