லண்டனிலுள்ள கடையில் கொள்ளையடிக்க சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரம்: உள்துறைச் செயலர் உத்தரவு
லண்டனிலுள்ள கடை ஒன்றில் கொள்ளையடிக்க வருமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடை முன் மக்கள் திரண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிக் டாக்கில் பரவிய செய்தி
லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு சாலையிலுள்ள ஒரு கடையில் கொள்ளையடிக்க வருமாறு டிக் டாக்கில் பரவிய செய்தியைத் தொடர்ந்து, அங்கு மக்கள் திரண்டனர்.
அந்த செய்தியில், இந்த திகதியில், இத்தனை மணிக்கு, இந்த உடை அணிந்து வரவேண்டும், ஆக்ஸ்போர்டு சாலையிலுள்ள கடை ஒன்றில் நாம் கொள்ளையடிக்கப்போகிறோம், ஓட முடியாதவர்கள் வரவேண்டாம், ஆயுதங்களைக் கொண்டுவரவேண்டாம் என விவரமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் மதியம் ஆக்ஸ்போர்டு சாலையில் ஒரு கூட்டம் மக்கள் கூட, உஷாரான பொலிசாரும் அங்கு குவிந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த குழப்பங்கள் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட சில பகுதிகளில் கூட்டம் கூடுவதற்கு வெள்ளிக்கிழமை வரை பொலிசார் தடை விதித்துள்ளனர்.
உள்துறைச் செயலர் உத்தரவு
இந்நிலையில், அந்த கடையில் கொள்ளையடிக்கும் விடயத்தில் சம்பந்தமுடையவர்களை வேட்டையாடுமாறு பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் உத்தரவிட்டுள்ளார்.
பொலிசாருக்கு இந்த விடயத்தில் தனது முழு ஆதரவு உண்டு என்று கூறியுள்ள சுவெல்லா, சில அமெரிக்க நகரங்களில் நடைபெறும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை பிரித்தானியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த என்ன நடவடிக்கை தேவையோ அதை செயல்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை வேட்டையாடி சிறையில் அடைக்கவும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |