39 வயதிலும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற மறுக்கும் பிரபல வீரர்
இங்கிலாந்து அணியில் மீண்டும் எப்படியாவது வாய்ப்பளிக்க வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 8ஆம் தேதி ஆண்டிகுவா மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடத்தக்கும் வகையில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஆஷஸ் தொடரில் அடைந்த படுதோல்விக்கு கடுப்பான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்து அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியில் மீண்டும் எப்படியாவது வாய்ப்பளிக்க வேண்டும் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் என்னை அணியில் இருந்து நீக்கிய முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது என்றாலும் இதற்காக நான் பின்வாங்க போவதில்லை. இது என்னுடைய கிரிக்கெட் கேரியரின் முடிவாக இருந்துவிடக் கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
35 வயதை கடந்த பின் என்னுடைய சாதனைகள் முன்பை விட அதிகமாக படைத்தேன். கடந்த 20 வருடங்களாக நிறைய விளையாடிய போதிலும் இன்னும் ஒருமுறை தீவிரமாக விளையாட விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 44 டெஸ்ட் போட்டிகளில் 160 விக்கெட்களை எடுத்து 21.72 என்ற மிகச் சிறப்பான சராசரி எடுத்துள்ளார். அதேசமயம் 39 வயதை கடந்துவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடாமல் இருப்பது எவ்வகை நியாயம்? என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.