சுற்றுலாப்பயணிகளால் கொரோனா அதிகரிப்பதாக அச்சம்: தனிமைப்படுத்தலை மீண்டும் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்
சுவிட்சர்லாந்துக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளால் கொரோனா அதிகரிப்பதாக அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, சுற்றுலாப்பயணிகளுக்கு தனிமைப்படுத்தலை மீண்டும் அறிமுகம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் பயங்கரமாக அதிகரித்தது. ஆகத்து மாதம் 1ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 23. இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 160...
இப்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் பலர் கோடையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று திரும்பியோர்!
ஆகவே, மாகாணங்களின் சுகாதார மாநாடுகளின் இயக்குநர்கள் என்னும் அமைப்பின் தலைவரான Lukas Engelberger என்பவர், சர்வதேச சுற்றுலா சென்று திரும்புவோருக்கு மீண்டும் தனிமைப்படுத்தலை அமுல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, இதற்கு முன் உருவான கொரோனா அலைகளின்போது, கொரோனா சிகிச்சை தவிர்த்து மற்ற சிகிச்சைகளை தள்ளிவைக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது போல மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதை ஆமோதிப்பது போல், மீண்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை உருவாகும் என்கிறார் சூரிச்சிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவ இயக்குநராக பணியாற்றும் Jürg Hodler.