தோனியை கடவுள் போல் பார்க்கிறார்கள்! அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை கடவுள் போல் பார்ப்பதை கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கமெரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.
நெகிழ்ச்சியடைந்த கமெரூன் க்ரீன்
1983ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்தடுத்து உலக கோப்பைகளை இந்திய அணி பெற்றதற்கு கேப்டன் மகேந்திர சிங் தோனி முக்கிய காரணம்.
2007ல் முதல் டி20 உலகக்கோப்பை, 2011 ஒரு நாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் என்று தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து தரப்பிலான கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்மை இடம் பிடித்தது.
தோனி தற்போது அனைத்து தரப்பிலான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஐ.பி.எல்-லில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை கடவுள் போல் பார்ப்பதை கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கமெரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.
கமெரூன் க்ரீன் கருத்து
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போது ரசிகர்கள் தோனியை வரவேற்ற விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அதே சமயம் தோனி இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் இந்த வரவேற்பு கிடைப்பதை பார்க்க முடிந்தது.
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடிய போது அந்த மைதானத்தில் இருந்ததை நான் பெருமையாக கருதுகிறேன், அவரை ரசிகர்கள் கடவுள் போல் பார்க்கிறார்கள், தோனி பேட்டிங் செய்வதற்காக மைதானத்திற்கு களமிறங்கிய போது ரசிகர்களின் வரவேற்பை நான் பார்த்ததே அதற்கு சாட்சி என கமெரூன் க்ரீன் தெரிவித்துள்ளார்.