கோஹினூர் வைரத்தால் சர்ச்சை... ராணியார் கமிலா அணியவிருக்கும் புதிய கிரீடம் இது தான்
பக்கிங்ஹாம் அரண்மனை அடிலெய்டு ராணியார் பயன்படுத்திய கிரீடத்தை கமிலா ராணியாருக்கு பரிந்துரைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய நாடாளுமன்ற அவை துவக்க நாளில் ராணியார் எலிசபெத் அணிந்தும் வந்துள்ளார்.
கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்திற்கு திடீரென்று இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, தற்போது சிறப்பு மிக்க இன்னொரு கிரீடத்தை ராணியார் கமிலா தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தோடர்பில் சர்வதேச விவாதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. குறித்த வைரமானது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டதுடன் விக்டோரியா ராணியாருக்கு பரிசளிக்கப்பட்டது.
10 வயதேயான சீக்கிய மன்னரிடம் இருந்தே குறித்த வைரம் பறிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் அந்த வைரம் தொடர்பில் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் தான் பக்கிங்ஹாம் அரண்மனை குறித்த விவாதத்திற்குரிய கிரீடத்திற்கு பதிலாக அடிலெய்டு ராணியார் 1831ல் பயன்படுத்திய கிரீடத்தை கமிலா ராணியாருக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், நான்காம் ஜோர்ஜ் மன்னர் தமது முடிசூட்டும் விழாவில் பயன்படுத்திய கிரீடம் ஒன்றையும் பரிந்துரைத்துள்ளனர். நான்காம் ஜோர்ஜ் மன்னர் பயன்படுத்திய கிரீடம் தான் இரண்டாம் எலிசபெத் ராணியார் 1953ல் தமது முடிசூட்டும் விழாவில் அணிந்துகொண்டார்.
இதே கிரீடம் தான், ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய நாடாளுமன்ற அவை துவக்க நாளில் ராணியார் அணிந்தும் வந்துள்ளார். தற்போது, அடிலெய்டு ராணியார் 1831ல் பயன்படுத்திய கிரீடத்தை கமிலா ராணியார் தெரிவு செய்வார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கிரீடமானது ராஜகுடும்பத்து சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த கிரீடம் எங்கே பாதுகாக்கப்படுகிறது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. மொத்தம் 1,333 வைர கற்கள் பதித்த அந்த கிரீடமானது, எலிசபெத் ராணியாருக்கு மிகவும் பிடித்தமான கிரீடங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
1820ல் Rundells குழுமத்தால் குறித்த கிரீடம் உருவாக்கப்பட்டுள்ளது, அப்போதைய மதிப்பில் சுமார் 8,216 பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.