மன்னருடன் ராணியாக பதவியேற்கும் கமீலா: புத்திசாலித்தனமாக காய் நகர்த்திய தருணங்கள்
பிரித்தானிய மன்னராக அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முடிசூட இருக்கிறார் சார்லஸ்.
அன்றே சற்றே சிறிய நிகழ்ச்சி ஒன்றில் ராணியாக பதவியேற்க இருக்கிறார் கமீலா.
இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவின் திருமண வாழ்வில் மூன்றாவது நபராக அறியப்பட்டவர் கமீலா. இளவரசி டயானா, தங்கள் திருமண வாழ்வில் மூன்றாவது நபராக ஒரு பெண் இருக்கிறார், அது கமீலா என பிபிசி தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது, பிரித்தானிய மக்கள் கொந்தளித்தார்கள்.
ராஜ அரண்மனை குலுங்கியது. பிரித்தானிய மகாராணியார் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார். சார்லஸ் டயானா தம்பதியரின் பிள்ளைகளான வில்லியம், ஹரியின் நிலையோ பயங்கரம்.
அப்படி ஒரு புயலாக ராஜகுடும்பத்தில் நுழைந்தவர்தான் கமீலா.
ஒருமுறை இளவரசர் சார்லசை காதலித்து, சரியான முடிவெடுக்கத் தெரியாமல் வேறொருவரைத் திருமணம் செய்து, சார்லசுக்கு திருமணமான நிலையிலும் அவருடன் தொடர்பு வைத்து, அதனால் இரண்டு திருமணங்கள் உடைந்து, பிள்ளைகள் பாதிக்கப்பட்டு, கடைசியில் டயானா அகால மரணமடைந்து, இப்படி ஒரு காதல் தேவையா என மக்கள் எரிச்சலடைந்திருந்தார்கள்.
ஆனால், சார்லஸ் கமீலாவின் திருமணம் நடைபெற்றபோது, தன் மீது மகாராணியார், டயானாவுக்குப் பிறந்த வில்லியம், ஹரி, பிரித்தானிய மக்கள் என அனைவருமே வெறுப்பில் இருப்பதை நன்கறிந்திருந்த கமீலா, புத்திசாலித்தனமாக ஒரு முடிவெடுத்தார்.
ஆம், வேல்ஸ் இளவரசரான சார்லசை திருமணம் செய்ததால் கமீலா வேல்ஸ் இளவரசி ஆகவேண்டும். ஆனால், மக்கள் அந்த பட்டத்தை ஏற்கனவே இளவரசி டயானாவுக்குக் கொடுத்துவிட்டார்கள். அதை, தான் பறித்துக்கொண்டால், மக்களுடைய வெறுப்பு மேலும் அதிகமாகும் என்பதை நன்கறிந்த கமீலா, தன்னை வேல்ஸ் இளவரசி என அழைக்காமல், இளவரசர் சார்லசின் மற்றொரு பட்டமான Duke of Cornwall என்பதை பயன்படுத்தி, Duchess of Cornwall என்றே அறியப்பட்டார்.
இந்நிலையில், மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து இப்போது சார்லஸ் மன்னராகிறார்.
பிரித்தானிய மரபுப்படி, ஆட்சி செய்பவர் பெண்ணாக இருந்தால் அவர் மகாராணி (Queen), அவரது கணவர் இளவரசர் மட்டுமே.
image - today.com
அதேபோல ஆட்சி செய்பவர் ஆணாக இருந்தால் அவர் மன்னர் (King). அவரது மனைவி, மன்னரின் மனைவி என்பதால் ராணி (Queen Consort).
கமீலா ஒரு காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்டவர் என்றாலும், இளவரசர் ஹரி, மேகன், இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவர் பொறுப்பாக செயல்பட்ட விதம் மகாராணியாரை வெகுவாக கவர்ந்தது.
ஆகவே, கமீலாவை Queen Consort என அழைக்கவேண்டும் என மக்களைக் கேட்டுக்கொண்டார் மகாராணியார்.
ஆக, சார்லஸ் 2023ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி மன்னராக பதவியேற்கும் அதே நாளில், சற்றே சிறியதொரு நிகழ்ச்சியில் கமீலாவும் ராணியாக பதவியேற்றுக்கொள்ள இருக்கிறார்.