பிரித்தானியாவின் புதிய ராணியாராக இவர் வருவார்: அரச குடும்பத்து நிபுணர்கள் சூசகம்
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் அரியணை ஏறும்போது அவரது மனைவி கமிலா ராணியாராக பொறுப்பேற்பார் என அரச குடும்பத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இளவரசர் சார்லசின் மனைவி கமிலாவுக்கு கடந்த வாரம் பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையிலேயே இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்பேற்கும்போது, அவரது மனைவியை ராணியாராகவே பொறுப்பேற்க வைப்பார்கள் என கூறப்படுகிறது.
தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த உயரிய விருதானது அதற்கான முன்னோட்டமாகவே அரச குடும்பத்து நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
2005ல் இளவரசர் சார்லஸ் உடனான திருமணத்திற்கு பின்னர், அலுவல் மற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ராணியாருக்கு உதவியாக இருந்து வருகிறார் கமிலா.
பொதுவாக அரசரின் மனைவிக்கு Queen Consort என்ற பட்டமே அளிக்கப்படும். ஆனால் அதனால் எழும் எதிர்மறையான கருத்துக்களை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் கமிலா Princess Consort என்றே அழைக்கப்படுவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கமிலாவுக்கு அவ்வாறான சூழல் எழாது எனவும், அவர் ராணியாராகவே அறிவிக்கப்படுவார் என அரச குடும்பத்து வரலாற்று ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சமீபத்திய நிகழ்வுகள் தெளிவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக பொறுப்புக்கு வரும்போது, கமிலாவும் ராணியாராக அறிவிக்கப்படுவார்.
இருப்பினும், இளவரசர் சார்லஸ் இது தொடர்பாக இறுதி முடிவெடுப்பார் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.