உண்மையாகவே ஷவர்மா சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படுமா?
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது மாணவி ஒருவர் பலியான சம்பவம் தமிழ்நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழப்புக்கு காரணம்
கேரளாவில் கடந்த ஆண்டு ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்பட்ட போது ஷவர்மா மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் ஷிகெல்லா (Shigella), சால்மோனெல்லா (Salmonella) பாக்டீரியாக்கள் இருந்ததை கேரள சுகாதாரத்துறை உறுதி செய்தது. மேலும் இறப்புக்கும் இந்த பாக்டீரியாக்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தது.
நன்றாக வேக வைக்கப்படாத அல்லது பழைய இறைச்சி, எளிதில் கெட்டுப்போகக் கூடிய மயோனைஸ், காலாவதியான சாஸ் ஆகியவை இந்த பாக்டீரியா உருவாக காரணமாக இருக்கலாம்.
மேலும் இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்துவது, ஷவர்மா தயாரிக்கும் உள்ள சுகாதாரமற்ற சூழல் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்த ஷிகெல்லா பாக்டீரியா வயிற்றுக்குள் செல்லும் போது சிறுகுடலில் தொற்றை ஏற்படுத்தி பெருங்குடலுக்கும் பரவுகிறது.
இதனால் வயிற்றுபோக்குடன், காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்வை, தலைவலி, செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.இதனால் நரம்புப் பிரச்சனை, சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படலாம்.
கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.
இந்த ஷிகெல்லா பாக்டீரியா உலகம் முழுவதுமே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்டுக்கு 18 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பதை தரவுகள் காட்டுகிறது.
எப்படி பரவும்?
அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர், கழிப்பிடம் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது.
இந்த பாக்டீரியா உள்ள பொருட்களை தொடும் போதோ அல்லது பாக்டீரியா உள்ள உணவுகளை சாப்பிடும் போதோ இது பரவும். மேலும் ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமாகவும் இது பரவலாம்.
எப்படி தடுப்பது?
அதிக வெப்பநிலையில் வைத்து உணவு சமைக்க வேண்டும். உதாரணமாக குறைந்தது 75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிக்கனை சமைக்க வேண்டும்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |