பொதுஇடங்களில் போனை சார்ஜ் செய்கிறீர்களா! உங்கள் தகவல் திருடப்படும்- எச்சரிக்கை
பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஷாப்பிங் மால், ஏர்போர்ட் போன்ற பொது இடங்களில் பொதுமக்கள் தங்களது மொபைல்போனை சார்ஜ் செய்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் இப்படி சார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படும், உங்கள் போன் ஹேக் செய்யப்படும் என்றால் நம்ப முடிகிறதா ? ஆம், இதுபோன்ற மோசடிதான் உலகமெங்கிலும் தற்போது நடந்து வருகிறது.
இவ்வளவு ஏன் எப்.பி.ஐ அமெரிக்க மக்களிடம் , பொது இடங்களில் சார்ஜ் செய்யும்போது கவனமாக இருக்குமாறும், வெளியில் செல்லும்போது முடிந்தவரை பவர் பேங்குகளை எடுத்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இப்படி நாம் சார்ஜ் செய்யும் கேபிள்மூலம் தகவல்களை திருடும் முறைக்கு பெயர் "ஜூஸ் ஜாக்கிங்" எனப்படும்.
இந்த சொல் முதன்முதலில் 2011ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இதுபோல் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது என செயல்முறை விளக்கம் அளித்தபோது உருவாக்கப்பட்டது.
மோசடிக்காரர்கள் பொது இடங்களில் உள்ள சார்ஜிங் போர்டுகளை அகற்றிவிட்டு போலி சார்ஜிங் போர்டுகளை அமைத்துவிடுவர்.
அதில் நமது போனை சார்ஜ் செய்யும்போது மேல்வேரை நமது போனில் செலுத்தி நமது போனை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவர் அல்லது நமது வங்கி கணக்கு, புகைப்படங்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்ற முக்கிய தகவல்களை திருடிவிடுவர். இந்த போலி சார்ஜிங் போர்டு உண்மை போலவே இருப்பதால் கண்டுபிடிப்பது கடினம்.
இது நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும் சில எளிய வழிகளை பின்பற்றுவதன்மூலம் இதை தவிர்க்கலாம். முதலாவதாக பொது இடங்களில் சார்ஜ் செய்யாமல் நம்முடன் பவர் பேங்கை எப்போதும் எடுத்து செல்வது.
அப்படி பவர் பேங்க் இல்லாமல் பொது இடத்தில சார்ஜ் செய்ய அவசியம் ஏற்பட்டால் அந்த சார்ஜிங் போர்டில் ஏதாவது கழட்டி மாற்றப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிகிறதா என பரிசோதித்துக்கொள்ளவும்.
அடுத்ததாக வெளிச்சந்தையில் கிடைக்கும் டேட்டா ப்ளாக்கிங் கேபிளை சார்ஜ் செய்ய பயன்படுத்தலாம். அதோடு நமது போனில் சாப்ட்வேர்களை தொடர்ந்து அப்டேட் செய்தும் இந்த மோசடியிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |