உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் வான் பாதுகாப்பு உதவி - கனடா அறிவிப்பு
Canada pledges air defense to Ukraine: உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உதவியை கனடா அறிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு உபகரண உதவி
கனடா பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்கு பிறகு, உக்ரைனுக்கு 350 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உபகரண உதவி தொகுப்பு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தார்.
உக்ரைன் தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Patriot Interceptors குறைவாக உள்ள நிலையில், ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து வரும் சூழலில் இந்த உதவி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ரஷ்யா பொதுமக்களை குறிவைத்து நடத்தும் வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பு அவசியம் என கார்னி கூறியுள்ளார். இந்த உதவி தொகுப்பின் மூலம் உக்ரைனின் மக்கள், கட்டமைப்புகள் மற்றும் வான்வழி பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் எந்த வகை Interceptors வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஆயுதங்கள், அமெரிக்காவின் மூன்றாம் தரப்பு நாடுகள் மூலம் விரைவாக வாங்கி உக்ரைனுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.
ரஷ்யா உக்ரைனில் படையெடுத்த 2022 பிப்ரவரி மாதத்திலிருந்து, கனடா மொத்தம் 25.5 பில்லியன் கனேடிய டொலர் உதவி வழங்கியுள்ளது. இதில் 8.5 பில்லியன் டொலர் இராணுவ உதவி அடங்கும்.
மேலும், கனடா அடுத்த இரண்டு ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு உக்ரைனுக்கு வழங்கப்படும் என கார்னி தெரிவித்தார்.
கனடாவில் சுமார் 1.3 முதல் 1.4 மில்லியன் உக்ரைன் வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இது உலகின் மிகப்பெரிய உக்ரைன் குடியேற்றக் குழுக்களில் ஒன்றாகும்.
இந்த புதிய உதவி, உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, கனடாவின் உறுதியான ஆதரவை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |