தோண்டத் தோண்ட வெளிவரும் பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள்! கனடாவில் சோகம்..
கனடாவில் உள்ள இரண்டு முன்னாள் உறைவிடப் பள்ளிகளில் மேலும் 54 பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தகைய கல்லறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஃபோர்ட் பெல்லி (Fort Pelly) மற்றும் செயின்ட் பிலிப்ஸ் (St Phillip's) உறைவிடப்பள்ளிகளுக்கு அருகில், தரையில் ஊடுருவிச் செல்லும் ரேடாரைப் பயன்படுத்தி கல்லறைகளைத் தேடும் கீசீகூஸ் ஃபர்ஸ்ட் நேஷனின் (Keeseekoose First Nation's) தேடுதலுக்குத் தலைமை தாங்கும் டெட் கியூவெசான்ஸ் (Ted Quewezance), நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புதிதாக 54 பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.
"ஒரு மனிதனால் இன்னொரு மனிதனை, குறிப்பாக ஒரு குழந்தையை இது போன்று கொன்று குவிக்க முடியுமா என்பதை இன்னும் நம்ப முடியவில்லை" என்று அவர் கூறினார்.
1905 முதல் 1913 வரை செயின்ட் பிலிப்ஸ் மற்றும் 1928 முதல் 1969 வரை ஃபோர்ட் பெல்லி ஆகிய இரண்டு பள்ளிகளும் கனேடிய அரசின் சார்பாக கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டன.
இதே போன்ற பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் கடந்த ஆண்டு கனடா முழுவதும் உள்ள பல உறைவிடப் பள்ளிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
கீசீகூஸ் ஃபர்ஸ்ட் நேஷனின் தலைவர் லீ கிட்செமோனியா, இந்த குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார். மேலும், இது குறித்து விசாரணை தேவை என்று பரிந்துரைத்தார். "நாங்கள் அவர்களை தினமும் கடந்து சென்றுள்ளோம், அங்கு கல்லறைகள் இருப்பதை ஒருபோதும் உணரவில்லை" என்று கூறினார்.
1800-களின் பிற்பகுதியிலிருந்து 1990-கள் வரை சுமார் 150,000 First Nations, Metis மற்றும் Inuit பிஸ்ன்ஹகுடிகளின் குழந்தைகள் இந்த உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
பல மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்கள் கலாச்சாரம் மற்றும் மொழி பறிக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம், பள்ளிகளில் துஷ்பிரயோகங்கள் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் மற்றும் தற்கொலை ஆகியவற்றால் இறந்ததை ஆவணப்படுத்தியது. இது 2015-ல் வெளிவந்த "கலாச்சார இனப்படுகொலை" என்ற அறிக்கையின்முலம் தெரியவந்தது.
கனடாவில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.