கனடாவின் குற்றச்சாட்டும் அமெரிக்காவின் குற்றச்சாட்டும் ஒன்றல்ல... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியா மீது கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டும், அமெரிக்கா தெரிவித்துள்ள குற்றச்சாட்டும் ஒன்றல்ல என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.
கனடாவின் குற்றச்சாட்டு
கனடா மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்ட, இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. ஹர்தீப் சிங் நிஜ்ஜர் (Hardeep Singh Nijjar) என்பவர் கனடாவில் கொல்லப்பட்டது தொடர்பாகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கனடாவின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, இந்தியா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், கனடா அவற்றைக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால், இதுவரை அப்படி எந்த ஆதாரமும் கனடாவால் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
இந்நிலையில், அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பன்னுன் (Gurpatwant Singh Pannun) என்பவரைக் கொல்ல இந்தியர் ஒருவர் திட்டமிட்டதாகவும், அத்திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இரண்டும் ஒன்றல்ல
ஆனால், கனடாவின் குற்றச்சாட்டும், அமெரிக்காவின் குற்றச்சாட்டும் ஒன்றல்ல என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கர்.
அமெரிக்கா ஒரு பிரச்சினையை எழுப்பியபோது, அந்நாடு சில விடயங்களைக் குறிப்பிட்டுக் கூறியது. சில நேரங்களில் சர்வதேச உறவுகளில் சவால்கள் எழுவது சகஜம்தான் என்று கூறியுள்ளார் அவர்.
அமெரிக்காவின் குற்றச்சட்டைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்க விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைக்க இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அதை அமெரிக்காவும் வரவேற்றுள்ளது.
அதே நேரத்தில் கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |