கனடா: 2027-ல் கூடுதலாக 2 லட்சம் நிரந்தர வதிவிட வாய்ப்புகள் அறிவிப்பு
Canada Adds 200K PR Spots in 2027 for Workers: 2027-ல் கூடுதலாக 2 லட்சம் நிரந்தர வதிவிட வாய்ப்புகளை கனடா அறிவித்துள்ளது.
2 லட்சம் கூடுதல் PR
கனடா அரசு 2027-ஆம் ஆண்டிற்கான தனது புதிய குடியேற்ற திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.8 லட்சம் நிரந்தர குடியுரிமை (PR) இலக்கைத் தொடர்ந்து வைத்திருப்பதுடன், அதற்கு மேலாக மேலும் 2 லட்சம் கூடுதல் PR இடங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு, தற்போது கனடாவில் வேலை செய்து வரும் மற்றும் தற்காலிக அனுமதியுடன் வசித்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூடுதல் 2 லட்சம் PR இடங்களில், 1 லட்சம் இடங்கள் தகுதியான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 லட்சம் இடங்கள் குடும்ப இணைப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரர்களுக்காக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் ஏற்கனவே தற்காலிக வேலை அல்லது கல்வி விசாவில் இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு குடியிருப்போர் நிரந்தர வதிவிடம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறமையான தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்ள கனடா முயற்சி
பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான திறமையான தொழிலாளர்களை நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ள கனடா முயற்சி மேற்கொள்கிறது. 2027 முதல் 2029 வரை ஆண்டுதோறும் 3.8 லட்சம் நிரந்தர குடியேற்ற இலக்கு தொடரும்.
இதில் சுமார் 2,44,700 பேர் பொருளாதார குடியேற்ற திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள். குடும்பக் குடியேற்றத்திற்கு 81,000 இடங்களும், அகதிகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுவோருக்காக 49,300 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் பரிந்துரைக்கும் Provincial Nominee Program (PNP) இடங்களும் 95,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் Express Entry உள்ளிட்ட Federal High Skilled பிரிவுக்கான ஒதுக்கீடு சற்று குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாணங்களின் தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப குடியேற்றத்தை அதிகம் ஊக்குவிக்க கனடா திட்டமிட்டுள்ளது.
மேலும், கனடா 2029 வரை வருடத்திற்கு 3.7 லட்சம் தற்காலிக குடியிருப்போர் வருகை இலக்கையும் மாற்றாமல் வைத்துள்ளது. இதில் 2.2 லட்சம் தொழிலாளர்களும், 1.5 லட்சம் சர்வதேச மாணவர்களும் அடங்குவர்.
இந்த புதிய அறிவிப்பு கனடாவில் ஏற்கனவே வாழ்ந்து வரும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறும் பாதையை மேலும் எளிதாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |